Wednesday, September 27, 2006

அல் குர்ஆன் ஓதுவதன் சிறப்புக்கள்

அல்குர்ஆன் அல்லாஹ்தஆலாவுடைய வார்த்தையாகும். ரஸுல் (ஸல்) அவர்களின் இறுதித் தூதுத்துவத்தை உறுதிப்படுத்துவதற்காகவும் மனித சமுதாயத்தை இருளில் இருந்து ஒளியின்பால் அழைக்கக்கூடிய ஒளிவிளக்காகவும் இறக்கிவைத்தான். இதனை சூறா இப்றாஹீமின் ஆரம்ப வசனம் இப்படிக் கூறுகின்றது: 'அலீப்.லாம். றா. இது மக்களை இருளில் (ஜாஹிலியத்தில்) இருந்து (சத்தியம் எனும் நேர் வழிகாட்டலாகிய ஒளியின் பால் அழைக்கக் கூடியதாக நாம் இந்த வேதத்தை இறக்கிவைத்தோம்.'

எனவே குர்ஆன் மனிதனுக்குரிய நேர்வழிகாட்டலாகும். இஸ்லாத்தின் அடிப்பையான சட்டயாப்பும் இந்தக்குர்ஆனே ஆகும். இந்தக் குர்ஆனை யார் உறுதியாக நம்புகிறாரோ அவர் முஃமினாவார். யார் இந்தக் கட்டளைகளை எடுத்து நடக்கிறாரோ அவருக்கு மக்த்தான கூலியுண்டு. நிச்சயமாக அதன் போதனைகள் ஒரு சீரான பண்பாடுகளின் பால் நேர்வழிகாட்டலின் மனிதனை வழிநடத்துகின்றது.

இந்தக்குர்ஆனை ஓதுவது மிகச்சிறப்பான இபாதத் ஆகும் இதனை ஓதுவதன் மூலமாக ஒரு அடியான் தனது இரட்சகனிடம் நெருங்குகின்றான். இதனை கீழ்வரும் வசனத்தில் தெளிவாகக் கூறுகின்றான்: 'நிச்சயமாக அல்லாஹ்வுடைய வேதமான குர்ஆனை ஓதி தொழுகையையும் நிலைநாட்டி தனக்கு அல்லாஹ் அருள்பாலித்த செல்வத்திலிருந்து இரகசியமாகவும் பரகசியமாகவும் அல்லாஹ்வின் பாதையில் செலவு செய்தவர்களும் நஷ;டமடையாத ஒரு வியாபாரத்தை விரும்புகின்றவர்களாவர்கள். ( பாதிர் 29)

அல்குர்ஆன், அல்லாஹுத்தஆலா தன் அடியார்களுக்கு ஏற்படுத்திக் கொடுத்துள்ள விருந்தோம்பலாகும். அத்துடன் அடியான் தனிமையில் இருக்கின்ற போது அவனது நண்பனாக இந்தக் குர்ஆன் இருக்கின்றது. தனது நேரத்தை வீணடிக்ககாமல் முழுமையாகப் பயன்படுத்தி இலாபம் அடைவதற்கு அவனுக்கு அல்குர்ஆன் துணைபுரிகின்றது. நபித்தோழர்கள் தாங்கள் தனிமையாக இருக்கின்றபோதெல்லாம் குர்ஆனைத் தங்களது தோழர்களாக ஆக்கிக் கொண்டார்கள். ஏனெனில் அல்குர்ஆன் ஓதுவதனால் கிடைக்கின்ற நன்மைகள் மிகவும் மகத்தானவையாகும். இதனையே நபியவர்கள் ஒருமுறை பின்வருமாறு கூறினார்கள். 'யார் குர்ஆனின் ஒரு எழுத்தை ஓதுகின்றாரோ அவருக்கு அதன் பத்துமடங்கு நன்மை கிடைக்கின்றது. இங்கு அலிப், லாம், மீம் என்பது ஒரு எழுத்தல்ல. மாறாக மூன்று எழுத்தாகும்.

மேலும் ரஸுல் (ஸல்) அவர்கள் குர்ஆன் ஓதுவதற்கு ஸஹாபாக்களைத் தூண்டியிருக்கிறார்கள். ஒருமுறை இப்படிக் கூறினார்கள்: 'குர்ஆனைத் திறன்பட ஓதுபவர் அல்லாஹ்வின் கண்ணியத்திற்குரிய தூதர்களுடன் இருப்பார். யார் தனக்குக் கஷ்டமாக இருந்தும் திக்கித்திக்கியாவது குர்ஆனை ஓதுகின்றாரோ அவருக்கு இரண்டு நண்மைகள் உண்டு.' (புஹாரி, முஸ்லிம்) மேலும் நபியவர்கள் பிறிதொரு இடத்தில் கூறினார்கள், 'யார் அல்குர்ஆனைக் கற்று ஓதிவருகின்றாரோ மறுமைநாளில் அது அவருக்காக அல்லாஹ்விடம் ஷபாஅத் செய்கின்றது.' மற்றொரு இடத்தில் கூறினார்கள், 'குர்ஆனை ஓதுவதால் மறுமைநாளில் அது அவரை நரக நெருப்பில்லிருந்து பாதுகாக்கின்றது.

குர்ஆனைத் தொடர்ச்சியாக ஓதிவரும்படியும் அதனை மனமிட்டவர்கள் அதனை தொடர்ந்து மீட்டல் செய்வது அவசியம் என்பது பற்றியும் வலியுறுத்திக் கூறியுள்ளார்கள். ஒருமுறை நபியவர்கள் சமூகத்தைப் பார்த்துப் பொதுவாகவும் குர்ஆனை மனனமிட்டவர்களைப் பார்த்துக் குறிப்பாகவும் இப்படி வசியத் செய்தார்கள். 'நீங்கள் தொடர்ச்சியாகக் குர்ஆனை ஓதி வாருங்கள். நிச்சயமாக எனது ஆத்மா எவன் கைவசம் உள்ளதோ அவன் சத்தியமாக குர்ஆன் ஆனது அவசரமாக நழுவிச் (மறந்து) செல்லக்கூடியது.


அடுத்து நபியவர்கள் குர்ஆனை ஓதுவதற்கு சில ஒழுங்குகளை முன்வைத்துள்ளார்கள். குறைந்தது ஒருவர் ஒருமாத்தில் முழுக்குர்ஆனையும் ஓதி முடிப்பது சிறப்புக்குரியதாகும். அது முடியாதவிடத்து ஒருவாரத்தில் ஓதி முடிப்பது நல்லதாகும். அதற்குக் குறையாமல் இருப்பது நல்லது. ஏனெனில் ஓதுபவர்களுக்குக் கஷ்டமாக இருக்கும் என்பதாகும். நபியவர்கள் அப்துல்லாஹ் பின் அம்ர் (ரழி) அவர்களைப் பார்த்து நீர் ஒருமாதத்திற்குள் குர்ஆனை ஓதிமுடிப்பீராக என்றார். ஆதற்கு அப்துல்லாஹ் பின் அம்ர் கூறினார்கள், எனக்கு அதனைவிட குறுகியகாலத்தில் ஓதிமுடிக்க சக்தியுண்டு என்றார்கள். ஆதற்கு நபியவர்கள் அப்படி என்றால் ஏழு நாட்களில் அதனை ஓதிமுடிப்பீராக, அதனை விடக்குறைந்த நாட்களில் ஓதிமுடிக்க வேண்டாம் என்றார்கள்' இந்த ஹதீஸிலிருந்து நாம் விளங்குவது யாதெனில் நபியவர்கள் மனிதர்களின் நிலமைகளை நன்கு அறிந்திருந்தார்கள். ஆதனால் ஒருவரின் சக்திக்குப் அப்பால் ஒருவரை வருத்தக்கூடாது என்பதாகும். ஏனெனில் இஸ்லாம் இலகுவான மார்க்கம். ஆதன் போதனைகளும் இலகுவானதாகும். குர்ஆன் ஓதுவது கஷ்டமாகும்போது மக்கள் அதனை விட்டுத் தூரமாகுவார்கள். அதனை ஓத வெறுப்பார்கள் பல சந்தர்ப்பங்களிலே ஒரு செயலை அல்லது இபாதத்தை தொடர்ந்து செய்யுமாறு வலியுறுத்தியிருக்கிறார்கள். இது சிறியதாக இருந்தாலும் சரியே. ஒருமுறை நபியவர்கள்: 'அல்லாஹ் மிகவும் விருப்பத்துக்குரிய செயல் ஒரு செயலை தொடர்ந்து செய்வதாகும். அது குறைவானதாக இருந்தாலும் சரியே!'

ஆனால் கவலைக்குரிய விடயம் இன்று எமது சமூகத்திலே குர்ஆன் வீடுகளில் பாசத்துக்குரிய பொருளாக பேணிப்பாதுகாக்கப்படுகின்றது. அல்லது குறிப்பிட்ட காலங்களில் மாத்திரம் (ரமழானில்) ஓதப்படுகின்றது. அல்லது யாராவது மரணித்தால் அவருக்காக ஓதி சாட்டப்படுகின்றது. இந்த நிலை மாறுவது அவசியமாகும்.

ஆல்குர்ஆனை ஓதும் போது கடைப்பபிடிக்கப்பட வேண்டிய சில அம்சங்களை இங்கு குறிப்பிடுவது அவசியமாகும். முதலாவதாக குர்ஆன் ஓதும்போது தன்னுடைய எண்ணத்தை அல்லாஹ்வுக்காக என்று தூய்மையாக்கிக் கொள்வது அவசியம். ஏனெனில் நிய்யத்து பிழையாக அமையும் போது அதற்குரிய நன்மை கிடைக்காமல் போகும். அத்துடன் ஓதும்போது மிகவும் பயபக்கிதியுடனும் பணிவுடனும் இருப்பது அவசியமாகும். அவ்வாறே குர்ஆன் சொல்லவிரும்புகின்ற கருத்துக்களை விளங்க முயற்சி செய்யவேண்டும். இதன் கருத்துக்கள் பற்றி சிந்திக்க வேண்டும். கருத்து விளங்காவிடினும் அதனை விளங்க முயற்சி செய்யவேண்டும். இதுபற்றி அறிஞர்கள் கூறும்போது 'குர்ஆனை நீ ஓதும்போது அது உன்னைப்பார்த்து இறங்கியது, உன்னைப் பாத்துப் பேசுகின்றது என்ற உணர்வுடன் ஓதவேண்டும்.' என்று கூறினார்கள்.

இறுதியாக அன்புக்குரிய பெற்றோர்களே! பயிற்றுவிப்பாளர்களே! ஆசிரியர்களே! நல்லதைக் கொண்டு நாம் எமது சந்ததிகளுக்கு உபதேசம் செய்வோமாக. குர்ஆனின் மீது அன்பு கொண்ட ஒரு சந்ததியை உருவாக்குவோம். குர்ஆனின் போதனைகளின் படி எமது சந்ததிகளைப் பயிற்றுவிப்போம்.

குர்ஆனின் போதனைகளின்படி தனது வாழ்க்கையை வாழக்கூடிய ஒரு சந்ததியை நாம் ஒருவாக்குவோம். ஆல்லாஹ் எம்மீது சுமத்திய அந்த அமானிதத்தை உரிய முறையில் பேணிப்பாதுகாப்போம். ஏனெனில் இஸ்லாமிய சமூகம் எப்போது அல்லாஹ்வின் வேதமான குர்ஆனை வெறுத்துப் புறக்கணிக்து தூரமாகத் தொடங்கியதோ அன்றிலிருந்து இழிவையும் சோதனையையும் அனுபவிக்கத் தொடங்கியது. அல்லாஹ் எமது சமூகத்தை பாதுகாப்பானாக.

'யாஅல்லாஹ் குர்ஆனை எமது உள்ளங்களுக்கு வசந்தமாக ஆக்குவாயாக. எமது குழந்தைகளின் உள்ளங்களில் அதனை ஓதுவதற்கும் மனனமிடுவதற்கும் அதன் போதனைகளை எடுத்து நடப்பதற்கும் ஆசையை ஏற்படுத்திவைப்பாயாக! எங்கள் அனைவரினதும் வாழக்கைக்கு ஒளியாக அதனை ஆக்கிவைப்பாயாக!'

No comments: